பல இரத்த சரித்திரத்தைக் கண்ட திண்டுக்கல் மலைக்கோட்டை.

தமிழ் மைந்தன்
0

திண்டுக்கல் வரலாறு 

திண்டுக்கல் மாநகர வரலாறு என்பது தென்னிந்தியாவின் முக்கிய அரசர்களாக சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலேயே துவங்கியுள்ளது. திண்டுக்கல் பாண்டிய நாட்டின் ஒரு அங்கமாக இருந்துள்ளது. பாண்டிய நாட்டின் நுழைவாயிலாக விளங்கியது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் சோழ அரசனாகிய கரிகால் சோழன், பாண்டியர்களிடமிருந்து திண்டுக்கல் நகரைக் கைப்பற்றி தனது ஆளுமைக்கீழ் கொண்டுவந்தான். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தென்னிந்தியாவின் அதிக பகுதிகளை கைப்பற்றும்போது திண்டுக்கல் அவர்கள் வசமானது. மீண்டும் சோழர்களால் ஒன்பதாம் நூற்றாண்டில் தன்வசமாக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் வசமானது.

மலைக்கோட்டை 

திண்டுக்கல்லின் வரலாற்றை பறைசாற்றும் வகையில், நகரின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையே அதற்கு சாட்சி. 'திண்டு' போன்று அமைந்துள்ள பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் மலைக்கோட்டை, மண்ணின் வீரம் மற்றும் கலைக்கு ஒரு சான்று.  பாண்டியர்கள் ஆட்சியில் மலையின் உச்சியில்  கோவில் கட்டப்பட்டுள்ளது. பாண்டியர்கள் ஆட்சியில் இது வழிபாட்டு தலமாக விளங்குகியது.

மலைக்கோட்டையை கைப்பற்றிய பேரரசுகள்.

14-ஆம் நூற்றாண்டில் (1335-1378) சுல்தானியர்கள் வசமானது. 1378-ல் விஜய நகர பேரரசால் சுல்தானியர்கள் வீழ்த்தப்பட்டு தங்களுடைய ஆழுமைக்குக் கீழ் கொண்டுவந்தனர். 1559-ல் மதுரை நாயக்கர்களால் ஆளப்பட்டது. 1563 விஸ்வநாத நாயக்கர் மறைவிற்குப் பின் முத்துக்கிருஷ்ண நாயக்கர் ஆட்சிக் காலம் 1602-ல் துவங்கியது. அவர் காலத்தில் 1605-ல் மலைமீது கோட்டை கட்டப்பட்டது. மலைக் கோட்டைக்குக் கீழேயும் கோட்டை கட்டப்பட்டது. நாயக்கர்கள் ஆட்சியில் இந்த மலைக்கோட்டை  ஒரு பாதுகாப்பு அரணாக பயன்படுத்தி கொண்டனர். நாயக்கருக்குப் பிறகு திறமையற்ற சிலர் ஆட்சி செய்தனர். அதன்பின்னர் வந்த இராணி மங்கம்மாள் மிகவும் திறமை வாய்ந்த அரசியாகத் திகழ்ந்தார்.


1742-ல் மைசூர் படை வெங்கட ராயர் தலைமையில் திண்டுக்கல்லை வெற்றி கொண்டது. அவரே திண்டுக்கல் பிரதிநிதியாகவும் ஆட்சி செய்தார். அச்சமயம் திண்டுக்கல் 18 பாளையங்களை உள்ளடக்கியதாக இருந்தது (ஒரு பாளையம் என்பது சில கிராமங்களைக் கொண்டது). அவரது ஆட்சிக் காலத்தில் அனைத்து பாளையங்களும் சேர்ந்து திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு, திண்டுக்கல் சீமை என அழைக்கப்பட்டது. 
அந்த பாளையக்காரர்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க விரும்பினர், கிஸ்தி செலுத்தவும் மறுத்தனர். 1755-ல் வெங்கடப்பா என்பவர் வெங்கட ராயருக்கு பதிலாக பொறுப்பேற்றார். அவரால் வெற்றிகரமாக செயலாற்ற முடியவில்லை.  1755-ல் மைசூர் மகாராஜாவால் ஹைதர் அலி என்பவர் சூழலை சமாளிக்க அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் ஹைதர் அலி மகாராஜாவின் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். 1777-ல் புருஷ்ன மிர் சாகிப் என்பவரை திண்டுக்கலின் ஆளுநராக நியமித்தார். ஹைதர் அலி திண்டுக்கல் கோட்டையை பலப்படுத்தினார். அவரது மனைவி திருமதி. அமீருன்னிஷா பேகம் என்பவர்  இறந்துவிட்டார். 


அவரது நினைவாக மலைக் கோட்டைக்குக் கீழேயுள்ள கோட்டையின் முன்பாக மண்டபம் கட்டப்பட்டது. தற்போது அந்தக் கோட்டை பள்ளிவாசலாகவும், மண்டபம் அதற்கு முன்பாகவும் அமைந்துள்ளது. அந்தப் பகுதி அமீருன்னிஷா பேகம் நினைவாக பேகம்பூர் எனவும் அழைக்கப்படுகிறது.  1783-ல் ஆங்கிலேயர்கள் படையெடுப்பு துவங்கியது. 1784-ல் ஆங்கிலேயர்களுக்கும் மைசூர் மன்னருக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக திண்டுக்கல் மைசூர் மன்னராட்சிக்குட்பட்டதாக இருந்தது. 1788-ல் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் திண்டுக்கலின் மன்னரானார்.

ஹைதர்அலி, திப்புசுல்தான் காலத்திலும் மலைக்கோட்டை ராணுவகேந்திரமாக பயன்படுத்தப்பட்டது. அதற்கு சாட்சியாக படைவீரர்கள் தங்கிய அறைகள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த கிடங்கு, பீரங்கி மேடு, சமையல் கூடம் போன்றவை தற்போதும் இருக்கின்றன.
மேலும் மலைக்கோட்டையில் இருந்து எதிரி படைகள் வருவதை கண்காணிக்கும் வசதியும் உள்ளது.


ஆங்கில பேரரசு

1790-ல் ஜேம்ஸ் ஸ்டீவாட் என்பவர் இரண்டாவது மைசூர் போரில் திண்டுக்கலை வென்றார். 1792-ல் மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல் தான் ஆங்கில பேரரசுக்கு முதன்முதலில் உட்படுத்தப்பட்டது. 1798-ல் மலைக்கோட்டையை பலப்படுத்தி பாதுகாப்பு அரணாக மாற்றியது. நாலாபுரமும் பீரங்கிகளும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்குமிடமும் அமைக்கப்பட்டன. ஆங்கிலப்படை 1798 முதல் 1859 வரை மலைக்கோட்டையிலேயே தங்கியிருந்தனர். அதன்பின் மதுரையைத் தலைநகராகக்கொண்டு, திண்டுக்கல்லை தாலுகாவாக வைத்து ஆட்சி செலுத்திவந்தனர்.  இந்திய சுதந்திரம் அடைந்த 15 ஆகஸ்ட் 1947 வரை ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

திண்டுக்கல் மலைக்கோட்டை பாளையக்காரர்களுக்கு முக்கிய தலமாக விளங்கியது. திப்பு சுல்தான் ஆங்கில பேரரசுக்கு எதிராக பிரஞ்சு படையுடன் சேர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் விருப்பாச்சி பாளையக்காரரும், திண்டுக்கல் பாளையத்திற்கு கோபால் நாயக்கரும், இதற்கு உதவியாக சிவகங்கை சீமையிலிருந்து அரசி வேலு நாச்சியாரின் தளபதிகளான மருதுபாண்டியர்கள் ஹைதர் அலியின் அனுமதி பெற்று மலைக்கோட்டையிலேயே தங்கியிருந்தனர்.

பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில்


மலைக்கோட்டையின் உச்சியில் பாண்டியர்கள் கட்டிய  கோவிலில்  சிவபெருமான் பத்மகிரீஸ்வரராகவும், பார்வதி தேவி அபிராமி அம்மனாகவும் எழுந்தருளி அருள்பாலித்த கோவில் ஆகும். திண்டுக்கல் மலைக்கோட்டை ராணுவ கேந்திராமாக மாற்றப்பட்டதாலும்
கோட்டையை கைப்பற்ற நடந்த சண்டையில் பக்தர்கள் வடிவில் ஒற்றர்கள் வரக்கூடும் என்று கருதி, கோவிலில் இருந்த சிலைகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் சுமார் 230 ஆண்டுகளாக மலைக்கோட்டை கோவிலில் வழிபாடுகள் நடைபெறவில்லை. தற்போது அந்த கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மலைக்கோட்டையில் 2 தெப்பங்கள் உள்ளன. மலைக்கோட்டையில் விழும் மழைநீர் தெப்பங்களில் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2 தெப்பங்களிலும் சுனை இருக்கிறது. இதனால் கடுமையான வறட்சியிலும் 2 தெப்பங்களும் வற்றுவது இல்லை. அவை முன்பு புனித தீர்த்த தெப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!